இந்திரன் மயங்கிய மேனகை அழகுடன்

சுந்தரவனத்து மல்லிகையும் கார்க்குழலிலேற

தந்திரமில்லாது சிறையிலிட்டாள் என்னை

மந்திரமாய் அன்பை மொழியில் பொழிந்தபடி

இயந்திர வாழ்க்கையிலும் மின்வெட்டில்லா அன்புடன்

இயங்கிய இல்லற வாழ்க்கையில் வேகத்தடையாய்

பதுங்கியிருந்த முதுமையும் தலைக்காட்ட

பதற்றம் கண்டது வாழ்க்கைப் பயணம்

பிறைநெற்றியுடன் சிவந்த கன்னங்களையும்

சூறையாடியதோ இளமையுடன் முதுமை

முத்துப்பற்களின்  நட்பை இழந்த மென்னிதழும்

முத்தாய்ப்பாய் உதிர்த்ததே காதலுடன் புன்முறுவலை

நூற்றாண்டு கடந்த தாம்பத்திய உறவும்

நூற்பாலையில் இழைந்தோடும் நூல் போலும்

ஏற்ற இறக்கத்துடன் பின்னலிட, இன்றோ

மறத்ததே அடங்கிய அவளது நாடியினால்

மூடிய விழிகள் அன்புடன் அழைத்திட

வடிந்தக் கண்ணீரை என்னவளுக்குக் காணிக்கையாக்கிப்

படபடப்புடன் குருதி சிந்திய என் குருதயமும்

ஓட்டத்தை நிறுத்திக் கொண்டதே நன்றியுடன் என்னவளுக்காக!