ஊரடங்கில் உல்லாசம் கொள்ளும் உடமை மானிட…

உண்டுவிட்டு உறங்கியது போதும் உடனே விழித்தெழு…

இங்கே மின்மயானச் சுவர்களெல்லாம் மிரளுகின்றன…

சுடுகாட்டு புதைகுழிகள் புலம்புகின்றன…

வெட்டியானின் ஆயுதங்கள் அலறுகின்றன…

ஒரு புறம் இந்நிலையென்றால் மறுபுறமோ

சாலைவாசிகளை பசிக்கொடுமை வதைக்கின்றன..

தினக்கூலிகள் வருமானமின்றி தவிக்கின்றனர்…

உயிரினங்கள் உணவின்றி அலைகின்றன…

இறப்புகளும் இழப்புகளும் இணைந்து வாட்ட

முன்களப் பணியாளர் முந்திவந்து முனைப்பு காட்ட

நீ மட்டும் உறங்கியது போதும்

உள்ளபொருள் ஒவ்வொன்றையும் உற்றவருக்களி…

தீநுண்மி தீண்டாமலிருக்க தீனியளி..

தற்காத்து கொள்வதோடு தன்னினங்காத்திடு…

உயிர்காக்க உயிர்வளி அளித்திடு…

கல்லா மாந்தருக்கு காக்கும்முறை கற்றுக்கொடு…

இழப்பைக் கண்டும் இரங்காது இருக்கின்றாயே..

இன்னிலை தகர்க்க அகக்கண் இச்சையழித்து ஈகையளிக்க இசைந்து வா இந்நொடியே வா இருக்கும் உயிர் காத்திட