கண்ணீர்

திட்டினாலும்

வருகிறது

கொஞ்சினாலும்

வருகிறது

பிறர் துன்பத்திலும்

வருகிறது

தனக்கு என்ற

போதிலும்

வருகிறது

எப்போதும் நிறைத்து

வைத்திருக்கும்

பொதுவுடமைக் கிணறு…

பொதிமூட்டையைச்

சுமக்கும் மனதிற்கு

ஆறுதல் பரிசு….

மனக்கரைசலை

முகர்த்துக்கொண்டு

வரும் முகிலின் சாயல்…

தூதுஇலக்கியத்தில்

இதுவும் ஒருவகை…

மனதின் ஓலைக்கு

மறுஓலை தந்துவிடும்

கண்ணீராய்

ஈரத்தில் அன்பு,இரக்கம்

பரிதவிப்பு,ஆற்றாமை,

இயலாமை அத்தனை

மலர்களும் மலர்ந்துவிடும்

வலி நிவாரணியாய்

வந்து செல்கிறது

வலி குறைந்தபாடியில்லை

கண்ணீரும் குறைந்தபாடியில்லை

மன இளகிகளுக்கு…

ஓவென்று கத்தி

ஒருநாள்

தீர்த்துவிடவேண்டும்

தீர்ந்து விடுமா வேதனைக்கிணறு

உள்ளக் கிணற்றில்

மிச்சமுள்ள

நீரெல்லாம்

மற்றவர் வடிக்க

விட்டுச்சென்ற கண்ணீரா?

தீர்த்துவிடவேண்டும்

என்றுசொன்னாலும்

தீர்வாய் விழிக்கரையில்

ஒற்றைக்காலை

நீட்டியக்கொக்காய் மனமீனைப்

பிடிக்க துணைவரும்

மயில்தோகையாய்

வருடும் இக் கண்ணீருக்கு

மனச்சான்று அதிகமாகவே உண்டு

பிறக்கும் போது தொடங்கி

இறப்பில் முடியும்

இவ் இலக்கியத்திற்கு உரையாசிரியர்

அவரவரே

உரை எழுதி தீர்ந்தப்பாடியில்லை

தொடர்கிறது ….

ஆறுதல் தரவந்த

கண்ணீர் இலக்கியம்

செ.புனிதஜோதி