பேய் மழையே இனியும் வாராதே போ போ

வானம் பார்த்து வாழ்ந்த கரிசல் காட்டவர்

ஓலமாய் வைகின்றனர்.

காலங்காலமாய் கட்டாந்தரையாய்

கிடந்த காட்டாறு கரை புரண்டோடி

தட்டி ஓலைக் குடிசையோடு

சட்டிப் பானைகளும் கறவைகளும்

தளிரும் சறுகுமாய் உயிர்களும்

அடித்துச் செல்லப்பட்டால்

சபிக்கத்தானே செய்வர்.

மிஞ்சிய ஐம்பதறுவது பேரை

சற்று வலிமையுடையோர் கரை தேற்றி

சொற்ப சாமன்களுடன்

ஓட்டுப் பள்ளியில் அடை சேர்த்தனர்

ஈரக் காரைச் சுவர் அங்கே எல்லோருக்கும்

கொஞ்சம் கதகதப்பாய்.

பெரியவனும் நடுவனும் சின்னவனும்

எப்பொழுதும் ஒன்றாய்த் திரியும்

அண்டை வீட்டு கால் சட்டைச் சிறுவர்கள்

அன்று நிரம்பி வழியும் கண்மாய்

தாம் பிறந்ததிலிருந்து காணாத

அதிசயமெனக் காணக் கிளம்பினர்.

புது வெள்ளத்தில் கொத்துக் கொத்தாய்

மீன் கூட்ட வண்ணங்கள் கண்ட

சிறுவன்களுக்கு கொண்டாட்டம்

வெள்ளமும் ஓலமும் அழுகையும்

சட்டென மறந்து விளையாட

மகிழ்ந்தோடும் பூஞ்சிட்டு வயது.

சேற்றுச் சரிவில் கண்மாய் சுவரில் வழுக்கி

ஒரு வழியாய் சிறு பாரை மேல்

கால்கள் நீரில் அளைந்தவாரு உட்கார்ந்தனர்

கண்ணெட்டும் தூரம் வரை

கரை முட்டும் செஞ்சிவப்பு வெள்ளம்.

பெரியவன்,

கண்டெடுத்த கண்ணாடிப் பையொன்றில்

துள்ளும் மீன் பிடிக்கக் குனிந்து நீர் அள்ளியபடி;

நடுவன்,

கட்டை விரல் நகக் கண்ணிடுக்கை கொரிக்கும் மீன்களின் சேட்டையில் களித்தபடி;

சின்னவன்,

நீரில் வாலும் மரக்கிளையொன்றில்

காலுமாய் தொங்கித் தவிக்கும் ஓணானைக்

காப்பாற்ற சிந்தித்தபடி.

மாட்டிச்சே” உற்சாகமாய் பெரியவன்

கத்தியதில் மற்ற இருவரும் தம் செயல்

மறந்து அவனைப் பார்த்தனர்

பைக்குள் கருவாழை நீளத்தில்

இரு மீன்கள் துள்ளிக் கிழித்து

வெளி வரத் துடித்து…

 “வாங்கடா போலாம்” பெரியவன் அழைக்க

மீன் குறுகுறு விளையாட்டை விட மனமில்லா நடுவன் “அதுக்குள்ளேயா” என்றான்

சின்னவனுக்கு கைப் பையில் மீனிரண்டும் துள்ளுவதைக் காண ஏதோ பண்ணியது.

நேற்று முந்தினம் நடு நிசியில்

வெள்ளம் வாசலுடைத்து வீட்டினுள் புகுந்து பாயில் தூக்கத்திலிருந்தனைப் புரட்டி

கண் திறப்பதற்குள் கழுத்தளவு நீரில் வாய் நிரம்பி மூச்சடைத்து திணறி முங்கி காதில் மந்தமாய் பல கதறல்கள் கேட்டு

யாரோ கைப் பற்றி மேல் தூக்கிக் கிடத்தி

கருமேக வானம் பார்த்து சகதி மேட்டில்

கிடந்த பயங்கரம் இன்னும் மீளவில்லை,

சின்னவனுக்கு.

 தான் திணறிய சுவாசம் அவ்விரண்டு

மீன்களும் அரைப் பை நீரில் துள்ளித் திணறுவதாய் நினைத்து, “அண்ணே மீன தண்ணீலியே விட்டுறுன்னே” என்றான் பதட்டமாய் சின்னவன்.

ஆமாண்னே” மீன் விளையாட்டில் கண்ணாய் நடுவன்.

 “இருட்டப் போவுது வாங்கடா”

பெரியவன் குரலுக்கு மறு பேச்சேது

மூவரும் ஓட்டுப் பள்ளி நோக்கி

ஒற்றையடிப் பாதையில் நடக்க

முன்னால் சென்றவன் கைப் பையில்

மீன்கள் குலுங்கியபடி…

வேணான்னே” மறுபடி அழும் குரலில் சின்னவன்,

சும்மா வாடா” தன் விளையாட்டு தடை பட்ட கோபத்தில் நடுவன்

முன்னே வேகமாய் நடந்த பெரியவன் சட்டென நின்றான்.

திரும்பி சின்னவனிடம்

நேத்து வானத்துலேர்ந்து அரிசி மூட்ட மட்டும் தானே போட்டாங்கே, இந்த மீன ஆத்தாகிட்ட குடுத்தா சுட்டுக் குடுக்கும்ல, தங்கச்சி பாப்பா சப்பிக்கிட்டே ஒருவா கஞ்சி சேத்து குடிக்கும்ல ராவுல பசில அழுவாம தூங்கும்ல” என்றான்.

ஏதோ புரிந்தது போல சமாதானமான

சின்னவன் “அப்போ வீடு வரைக்கும் பைய நா தூக்கிட்டு வரேண்னே” என்று வாங்கிக் கொண்டான்.

முகத்துக்கு நேரே தூக்கிப் பிடித்தபடி

மீன்கள் கண் நோக்கி “என்ன பண்றது தங்கச்சி பாப்பா பாவம்ல, வீடு வரைக்கும் பைத் தண்ணிக்குள்ள கொஞ்ச நேரம் உள்ளார போய் மூச்சு விட்டுக்கோங்க” என்றான், மனதில் நெருடும் இருவலியோடு.

அதுவரை துள்ளிய மீன்கள்

ஏதோ புரிந்தது போல

நீரில் அமைதியாய் முகம் பொதிந்து அயர்ந்தன

கருமேகம் விலகி அந்தி மாலை

மஞ்சள் வெயில் கீற்றில் ஒற்றையடிப் பாதை

தெளிவாய்த் தெரிந்தது முன்னே.

#கதைக்குள்_ஒரு_கவிதை

                                                                 ~நளினி சுந்தரராஜன்.