பெற்ற துயரது அன்னைக்கெனினும்..
பெருமைக்கண்ணீர் அவருக்கன்றோ??
உற்ற மகிழ்வதை வெளிக்காட்டாது..
உறவுகளின் முன் அவர் ஊமையன்றோ?

ஊட்டி வளர்ப்பவள் தாயேயெனினும்..
உழைத்துனை உயர்த்துதல் அவரே யன்றோ?
காட்டிடாமல் தன் அன்பொளித்தாலும்..
கழை ஓசையாய் அது வெளிப்பட்டிடுமே!

தோளுக்குயர்ந்ததும் தோழனாவார்!
தாங்கிய கரம் கொண்டு தழுவிடுவார்!!
சாளரக் காற்றென சத்தமின்றி..
சங்கீதமாய் அவர் இனித்திடுவார்!

விந்தையென்றாகி வியப்புதரும்..
தந்தையென்றான தவமன்றோ!!