ஈரைந்து திங்கள் தவக்கரு சுமந்து

கூரைவேயா இல்லில் அரணாய் நின்று

புரையொன்றை கடிந்தே விளக்கி நானொளிர

அரை உயிராய் தானுருகும் மெழுகவள்…

உற்றதோர் துணையை இழந்த பின்பும்

பெற்றதோர் பிள்ளையின் துன்பம் எண்ணி

அற்றே கலங்காமல் அகங்காத்து தரங்குறையா

பொற்றொத்து மங்காது மிளிரும் மெய்மையவள்…

நடை பயின்ற நாட்களிலே நேர்ந்த

தடையொன்றால் தவறி நான் விழுந்தால்

படைதிரட்டி தரைப்போர் செய்து வெற்றி

நடையோடு திரும்பிடும் வீர மங்கையவள்…

அழுக்கூடையோடு அரைவயிறு கூழுண்ட போதிலும்

அழுதொன்று கேட்டு நின்றால் அப்பொருள்

பொழுது சாயும்முன் விழிகாட்டி மகிழ்வூட்டும்

தொழுகின்ற தெய்வ வம்சத்தின் வரமவள்…

விதி தந்திட்ட வினைகளை துமியாக்கி

அதிகாலை வேளையில் ஆகாரம் செய்வித்து

மதிமுகம் பெற்றிட கல்விச் சாலையனுப்பி

சதியழித்து சாதித்த சரித்திர நாயகியவள்…

பாரமென எண்ணும் தன்மை உணர்ந்தென்

தாரமவள் தருகின்ற இன்னல் மறைத்து

சாராப் பண்போடு என்னலமோங்க இக்கணம்

ஓரமாய் ஒதுங்கி வாழ்த்தும் தாய்மையவள்.